சுவாமி சின்மயானந்தாவின் வாழ்வும், பணியும்

✍ ராம ஜெயம்

பாலகிருஷ்ணமேனன் எனும் இயற்பெயரைக் கொண்டு, அளவில்லா ஆர்வமும், எண்ணற்ற வினாக்களையும், மனதில் சுமந்து பயணித்ததோடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ஆன்மிக வேதாந்த கருத்துகளைப் பரப்பியும்,கல்விப் பணிகள் ஆற்றியும் அருந்தொண்டாற்றியவரே சுவாமி சின்மயானந்தா.

இவர் கேரளாவின் எர்ணாகுளத்தில் 1916-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் நாளில்“பூதம்பள்ளி “என்னும் பெயரைக் கொண்ட ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தார்.இவரது தந்தை, புகழ்பெற்ற நீதிபதி ஆவார்.. இவர் கொச்சி, திருச்சூரில் பள்ளிப் படிப்பை முடித்ததோடு மட்டுமல்லாமல், எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரியில் எஃப்.ஏ பட்டமும், திருச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரியில் பி.ஏ பட்டமும் பெற்றார்.  மேலும்,லக்னோ பல்கலைக்கழகத்தில் இலக்கியமும், சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.அதோடு இவரது கல்விப் பயணம் நிற்கவில்லை… ஊடகவியலையும் உற்சாகமாக பயின்றார்.  இதன் மூலம் அரசியல், பொருளாதாரத்தில் பல சீர்திருத்தங்களை செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் ஊடகத் துறையில் பணியாற்றினார்

1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றதால் ,கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இவர் உட்பட பல கைதிகளுக்கு விஷக் காய்ச்சல் ஏற்பட்டததால் ,அவர்களை சிறை நிர்வாகம் கவனிக்காமல் வீதியில் வீசியது. இவரின் நிலையைக் கண்டு வருந்திய ஒரு பெண்மணி  இவரை மருத்துவமனையில் சேர்த்ததால் உடல்நலம் தேறினார்.

பின்னர் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் பணியாற்றினார்.அவர் , ஒருமுறை ரிஷிகேஷ் சென்றபோது சுவாமி சிவானந்தரைச் சந்தித்தார். அது இவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.அதன் பின்னர் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டதோடு மட்டுமல்லாமல்,ஆன்மிகப் புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினார்.மேலும், சுவாமி சிவானந்தர் அவர்கள் 1949-ல் இவருக்கு தீட்சை அளித்து ‘சுவாமி சின்மயானந்தா’ என்ற பெயரையும் சூட்டி,இமயமலையில் இருந்த சுவாமி தபோவன மகராஜிடம் இவரை அனுப்பினார்.இதனைத் தொடர்ந்து, சுவாமி தபோவன் மகராஜரிடம் ஞானத்தைப் பெற்று. அவரது அரவணைப்பிலும் அன்பு மழையிலும் நனைந்தார். புனிதமான கங்கைத்தாய், இமயத்திலிருந்து கீழே இறங்கிப் பயணிக்கும் தொடர் ஓட்டத்தால் ஜீவகோடிகள் பயனுறுவதைக் கண்ணுற்றார். தன் வாழ்வை முழுமையுறச் செய்த வேதாந்த உண்மைகளை, தனது குருவின் ஆசியுடன், தானும் கங்கையைப் போல பயணம் செய்து உலக மக்களிடையே பரப்புவது என அவர் முடிவு செய்தார்.

மேட்டிலும், நாட்டிலும் அயராது அவரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப் பயணங்களில் ஊன்றப்பட்ட விதைகளே, சின்மயா இயக்கத்தின் மூலக்கருவாக அமைந்தன. பேச்சாற்றல் கொண்ட அவர் வாயிலாக வெளிப்பட்ட வேதாந்தக் கருத்துகள், நவீனக் கண்ணோட்டம் இழையோடும், நகைச்சுவைகளாலும், அவரது சாதுர்யத்தாலும் மெருகேற்றப்பட்டு கேட்போர் கவனங்களை ஈர்த்து, அவர்களது மன எழுச்சிக்கான தூண்டுகோலாக அமைந்தன.

பகவத்கீதைக்கும், உபநிடதங்களுக்கும் அவர் எழுதிய விளக்கவுரை ஒப்புயர்வற்று மிளிர்கின்றன. மேலும் மக்களின் ஆன்மீக மன மறுமலர்ச்சிக்கு ஏதுவாக, அவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தன்னிறைவு கொண்ட தொலைநோக்குப் பார்வையுடன் பள்ளிக்கூடங்களையும். கல்லூரிகளையும் அமைத்தார். ஆலயங்களையும். அவர் ஆசிரமங்களையும் உருவாக்கினார். ஓர் உயர்ந்த துறவு இயக்கத்தினை நிறுவி. பல ஆன்மீகப் பயிற்சிக் கூடங்களை ஏற்படுத்தினார். இவ்வாறு, ஓர் உன்னத இலக்கோடு, ஓய்வின்றி அயராது. ஆன்மீக மற்றும் சமுதாயப் பணிகளை மேற்கொண்டு, சமூக மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தார். எவரும் எளிதில் எட்டாத சிகரத்தை எட்டி. குன்றின் மேல் இட்ட விளக்காக இன்றும் ஒளிர்கின்றார்.

சின்மயா மிஷன் என்ற அமைப்பானது சுவாமி சின்மயானந்தாவின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காக 1953 இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் நிர்வாகத் தலைமை அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளது.

சின்மயா மிஷன் தென்னிந்தியா மற்றும் இந்திய கலாச்சாரத்தினைப் பின்பற்றும் இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழும் அமெரிக்கா,  இலங்கை மற்றும் இன்னும் பலநாடுகளில் இதன் ஆதிக்கமானது காணப்படுகின்றது.

ஆன்மிக உணர்வு என்பது சோர்வு, தளர்ச்சி போன்றஅனைத்துத் தடைகளையும் நீக்கி வெற்றி பெற வைக்கும் சக்தி வாய்ந்தது. “சுவாமி விவேகானந்தரின் வீரஞ்செறிந்த உரை இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்ததைப்போல,’ இன்றைய நாகரிகப் போக்குகளால் அவதியுறும் இளைஞர்களின் உள்ளத்தில் ஆன்மிக உணர்வைத் தட்டிஎழுப்பும் நன்மை பெற்றன சுவாமி சின்மயானந்தரின் சிறப்புச் சிந்தனைகள். அச்சிந்தனைகள் இளைஞர்கள்மனதில் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சக்தி வாய்ந்தவை ஆகும்.

“அன்புதான் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கை. பிறரிடம் எப்படி அன்புடன் நடக்க வேண்டும் என்பதைப் புரிந்திருக்கிறாயா? அப்படியென்றால் நீதான் சிறந்த இந்து மதத்தினன்.என்று நம்மைப் பற்றியே நமக்குப் புரிய வைத்ததோடு மட்டுமல்லாமல்,நாம் வணங்கும் தெய்வங்கள் இருக்க கூடிய கோவில் என்பது கலாச்சார மறுமலர்ச்சி நிகழ வேண்டிய ஒரு சமூக மையக்கூடம். கருணையும், கம்பீரமும் (கங்கையும், யமுனையும்) சங்கமிக்கும் ஒரு புனிதத் தலம்”ஆகும்.இந்திய வரலாற்றின் காலப்போக்கில், கோவில்கள் வெறும் சடங்குகள் நிறைவேற்றப்படும் இடங்களாகவும், பக்தர்களும், அர்ச்சகர்களும் கூடித் தங்கள் முடிவற்ற ஆசைகள் குறித்து முறையிடும் சந்தைக் கூடங்களாகவும் மாற்றம் கொண்டன. சுவாமி சின்மயானந்தர் கோயில்களை, ஆன்மீக மலர்ச்சி நிகழும் புனிதத்தலங்களாக திரும்பவும் நிலைநிறுத்தினார். இதன் மூலம் இந்துமதத்தின் மறுமலர்ச்சி, ஆதிசங்கரரின் காலத்திற்குப்பின் இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது எனலாம். சுவாமி சின்மயானந்தரின் பார்வை. கூர்மையானதாகவும் அதே சமயம் பரந்து விரிந்தும் காணப்படுகிறது. அவரது கருத்துப்படி, கோவில்களின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம். ஆனால் அதேசமயம் மாறுதலடைந்து வரும் சமூகத்தின் தேவைகளை, கோயில்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்தும் நோக்கத்துடனே. அவர் வேதாந்தத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விரித்துரைத்தார். இதைத் தொடர்ந்து உருவ வழிபாட்டின் தத்துவத்தையும் விளக்க முற்பட்டார்..

“ஒரு வேலையைச் செய்வதற்கு உங்களுக்கு எத்தனை மணி நேரம் ஆயிற்று என்பதை ஒரு குறையாகச் சொல்லி முமுணுக்காதீர்கள். உங்கள் அன்றாட வேலையில், ஒவ்வொரு மணி நேரத்திலும் உங்களை எவ்வளவு தூரம் மளமார ஈடுபடுத்திக் கொண்டீர்கள் என்று மதிப்பிட்டுப் பார்க்கும் பெருந்தன்மை உங்களுக்கு இருக்க வேண்டும்.

தொடர்ந்து முயலுங்கள்; மனம் சோர்ந்துவிடாமல், மகிழ்ச்சி குன்றிவிடாமல், நீங்கள் அடைய விரும்பும் வெற்றிக் கம்பத்தை நோக்கிச் செல்லுங்கள். வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொண்டு முயலாவிட்டால், உங்கள் திறமை முழுவதும் சிறப்பாக வெளிவர வழி கிட்டாது. அப்படி நீங்கள் முயலும்போது கடவுள் உங்கள் வழியில் சோதனைகளை ஏற்படுத்தி உங்களைச் சோதிப்பார். பார்வைக்கு அவை கடக்க முடியாத தடைகளாகத் தோன்றும். உற்சாகம் குறையாமல், அச்சத்துக்கு இடந்தராமல், அந்தத் தடைகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முழுத் தன்னம்பிக்கையுடன் முயற்சிகளில் ஈடுபட்டு முன்னேறுங்கள். அந்தத் தடைகள், நிழல் போல் மறைந்து விடும். அதுதான் கடவுள் அருள்!“நீங்கள் செவி கொடுத்துக் கேட்டால் இறைவன் உங்கள் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.

“வாழ்க்கையில் நாம் அடையும் பொருள், நமக்குப் புகழைத் தருவதில்லை; அதற்கான முயற்சிதான் புகழை அளிக்கிறது.”என்கிறார் சின்மயானந்தா

“நாம் பந்தயத்தின் முடிவில் அடையும் கோப்பையை யாரும் வெற்றி என்று பாராட்டுவதில்லை. ஓடி அடைந்த வேகத்தை, செல்ல முயன்ற மனத்துணிவைத்தான் மெச்சுகிறார்கள்.*ஆதலால் நாம் விடாமுயற்சியுடன் செய்யும் செயல் எத்தகைய சிறப்பான மாற்றத்தையும் உருவாக்கிடும் என்பதற்கு சான்றாக சின்மயானந்தானந்தாவின் செயல்கள் நமக்கு ஊக்கம் அளிக்கின்றன.

“உபநிடதத்தின் செய்திகளை விளக்கவும், பயிற்றுவிக்கவும். வீடு வீடாகச் சென்று பரப்பவும் நமக்கு கூடுதல் ஆன்மீக ஆசிரியர்கள் தேவை. நம் நாடு முழுவதற்கும் விவேகானந்தர்கள் அடங்கிய ஒரு மாபெரும் படையே அவசியமாகிறது.” என்கிறார் சுவாமி சின்மயானந்தர்.மேலும் அவர்கள் அத்வைத தத்துவத்தை. இன்றைய இளைய தலைமுறையினருக்கு கற்பிக்கும் நவீன கால குருகுலத்தைக் கற்பனை செய்தார். மாணவர்கள் மூலம் நமது வேதாந்தக் கூற்றுக்களை வெளியுலகிற்குக் கொண்டு செல்ல முடியும் என்று நம்பினார். ஆதலால், தொடர்ந்து தனது கனவை மெய்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினார்.இதன் விளைவாக உருவானதே மும்பை நகரில் தோன்றிய “சாந்தீபனி சாதனாலயா’. இங்கு ஆங்கில மொழி வாயிலாக வேதாந்தக் கல்வியானது போதிக்கப்படுகிறது.

“குழந்தைகள் நாம் நிரப்ப வேண்டிய காலிப்பாத்திரங்களல்ல-அவர்கள் ஏற்றப்பட வேண்டிய விளக்குகள்” என்பது சுவாமி சின்மயானந்தரின் கூற்று. பாலவிஹார் என்பது 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சின்மயா இயக்கத்தின் கிளையாகும். குருதேவரின் ஊக்குவிக்கும் எண்ணங்களை இவை மெய்ப்பிக்கின்றன.

“குழந்தைகள் விளையாட்டாக குணநல மதிப்புகளை அறிந்து கொள்ளவும், சந்திரனைப் போல் குதூகலிக்கவும், சூரியனைப் போல் பிரகாசிக்கவும் உதவ வேண்டும்”,-என்னும் பாலவிஹாரைப் பற்றிய சுவாமி தேஜோமயானந்தரின் கணிப்பு, மிகவும் எளிமையான ஆனால் விசேஷமான ஒன்றாகும்.

‘ஒரு மறுமலர்ச்சி நிகழ்ச்சியால் இளைய தலைமுறையினர் ஊக்கமுறும்போது, அது தொடர்ந்து வலுவடைந்து, பெரும் காட்டாற்று வெள்ளமெனப் பாய்ந்து, அந்த தலைமுறையினரது அனைத்து உள்ளங்களையும், நல்லெண்ணத்தாலும், நம்பிக்கையாலும் நிரப்புகிறது”. என்று ஒரு சமயம் சுவாமி சின்மயானந்தர் கூறினார். இதுவே சுருக்கமாக சின்மயா யுவகேந்திராவின் (CHYK) மூல மந்திரம் எனலாம். உலகளாவிய சின்மயா இயக்கத்தின் இளைஞர் கிளையானது. 13-28 வயதினருக்காகத் துவங்கப்பட்டதாகும். சுவாமி தேஜோமயானந்தரின் பார்வையில் CHYK இன் நோக்கமானது, இளைஞர்களை ஊக்கப்படுத்தி ஒரு முழுமையான இலக்கை நோக்கி, உன்னத நெறிகளுடனும், உயரிய சிந்தனைகளுடனும் பயணிக்கச் செய்து, அவர்கள் வாழ்வை வெற்றியடையச் செய்வதாகும்.

2003 இல் சின்மயா யுவகேந்திரா அமைப்பு. “இளைஞர் ஆளுமைத் திறன் திட்டம்” (Youth Empowerment Programme – YEP) என்ற கல்வியும் சேவையும் கலந்த ஒரு வித்தியாசமான உறைவிட குருகுல கல்வித்திட்டத்தைத் துவக்கியது. இத்திட்டத்தின் கோட்பாடு: “அறிந்துகொள்-சேவைபுரி-வளர்ச்சியடை” என்பதாகும். கல்லூரி மாணவர்களுக்கான இத்திட்டம், முற்றிலும் நன்கொடைகளால் செயல்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் தமக்குமுன் நிற்கும் சவால்களைப் புரிந்து கொள்ளவும். அவற்றை வெற்றிகொள்வதற்குக் கையாள வேண்டிய, யதார்த்தமான வழிமுறைகளைக் கண்டறிந்து செயலாற்றவும் இத்திட்டம் வாய்ப்பளிக்கிறது. இதில் தேர்ச்சியுறும் மாணவர்கள், “யுவ வீரர்கள்” என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சின்மயா இயக்கத்தின் மையங்களில் ஒரு வருட காலம் தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றுகின்றனர். இவர்களது சேவை, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுகிறது. இந்தியாவில் இத்திட்டத்தின் மூலம் பெரும் வெற்றி கிட்டியதால், உற்சாகம் கொண்ட யுவவீரர்களை உருவாக்க அமெரிக்காவிலும் YEP தொடங்கப்பட்டது.

சின்மயா இயக்கத்தின் மாபெரும் திட்டங்களை நிறைவேற்றுவதில் CHYK மற்றும் YEPயின் பங்களிப்பு மிகவும் கணிசமானது. இதற்குச் சான்றாக “இந்தியாவின் மாற்றத்திற்காக இந்தியர்களின் மாற்றம்” என்ற பெருந்திட்டத்தைக் குறிப்பிடலாம்.

ஒரு வீட்டின் தாயானவள் ஆன்மீக சாதகராகவும் அமைந்துவிட்டால் அவ்வீட்டின் சூழலே முற்றிலும் மாறுபட்டு விடுகிறது. அவர்கள் வெளியே நிகழும் சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டுமென்ற அவசியம் எழுவதில்லை. “நீ ஒருத்தி மாறும்பொழுது உனது சுற்றுப்புறமே மாறுகிறது. தாயான நீயே ஒரு வழிகாட்டி மற்றும் குருவாகிறாய்”-.என்று கூறியதோடு மட்டுமல்லாமல் ,முதன் முதலில் பெண்களுக்கென “தேவியர் குழு” என்ற அமைப்பினையும் சென்னை நகரில் 1958 ஆம் ஆண்டு தொடங்கினார்.

உபநிடதங்கள், வேதங்கள், பகவத்கீதைக்கான இவரது விளக்க உரைகள் பிரசித்தி பெற்றவை. ஏறக்குறைய 95 நூல்கள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இவரது நூல்கள் தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு, பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 இந்திய தத்துவத்துக்கான வருகைதரு பேராசிரியராக அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார். உலகம் முழுவதும் ஆசிரமங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளை தொடங்கினார். கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ‘சின்மயா’ என்ற அமைப்பை உருவாக்கினார்.

 அத்வைத வேதாந்த ஞானம், பகவத்கீதை, உபநிடதங்கள் ஆகியவற்றை உபதேசித்தவர். 40 ஆண்டுகளுக்கு மேலாக சமூகப் பணியாற்றியவர். இந்தியாவின் குறிப்பிடத்தக்க ஆன்மிகத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் சுவாமி சின்மயானந்தா 77 வயதில் (1993) -ல் மறைந்தார்.

(சென்னைக்கு அருகில் உள்ள கும்மிடிப்பூண்டி மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயாவில் ஆசிரியர் கண்கள் தமிழ் பண்டிட்.)

மேலும் படிக்கவும் : தமிழின் தந்தை யு வி சுவாமிநாதன் ஐயர்

Facebook Comments

One thought on “சுவாமி சின்மயானந்தாவின் வாழ்வும், பணியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *