– கள். தனலட்சுமி
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 1836 ஆம் ஆண்டு வங்காளத்தில் கமார்புக்கூர் என்னும் கிராமத்தில் சந்திரமணி தேவிக்கும் குதிட்ராம் சட்டர்ஜிக்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர்களால் கதாதர் என அன்புடன் அழைக்கப்பட்டார். கிராம மக்கள் அனைவரும் விரும்பும் துருதுரு குழந்தையாக வளர்ந்தார். பின்னாளில் ராணி ராசமணி தேவியார் கட்டிய தட்சிணேஸ்வரம் காளி கோவிலில் அர்ச்சகராக விளங்கினார். தோத்தாபுரி, பைரவி பிராம்மணி போன்ற பெரியோர்கள் அவரைத் தேடி வந்து ஆன்மீகப் பயிற்சி அளித்தனர். அம்பிகையின் பால் அவருக்கிருந்த பிரேமை, அசைக்க முடியாத நம்பிக்கை இவற்றால் அம்பிகையை நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றார். அவருக்கு கிடைத்த அந்த தரிசனம் நரேந்திரரின் வாழ்க்கையை மாற்றியது. “இறைவனை கண்டவர் யாரேனும் இருக்கிறார்களா” என தேடி அலைந்த நரேந்திரருக்கு நேரிடையான, சத்தியமான பதிலை ஸ்ரீராமகிருஷ்ணரால் அளிக்க முடிந்தது. நரேந்திரர் அடிக்கடி தக்ஷிணேசுவரம் வந்தார். 5 ஆண்டுகள், நரேந்திரரின் அனைத்து சந்தேகங்களையும் போக்கி, அவரிடம் நேரடி தீட்சை பெற்ற மற்றவர்களிடமும் நரேந்திரர் உங்களை வழிநடத்துவார் என்று கூறி காளி தேவியின் திருவடி சேர்ந்தார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
தான் அவ்வளவு காலம் சேர்த்து வைத்திருந்த ஆற்றல் அனைத்தையும் நரேந்திரருக்கு வழங்கினார். அந்த ஆற்றலை வைத்துக் கொண்டு தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட நரேந்திரரிடம் “உரிய நேரத்தில் அம்பிகை உன்னை வழி நடத்துவாள்” என்று கூறினார் பரமஹம்சர்.
பரமஹம்சருக்கு பல இல்லற சீடர்களும் இருந்தார்கள். மிக முக்கியமானவர்களான சிலரை பார்ப்போம்.
சுரேந்திரநாத் மித்ரா,
குருநாதர் உயிருடன் இருந்தபோது பல வகையிலும் அவருக்கு தொண்டு செய்தவர். குருநாதரின் மறைவுக்கு பிறகும் நரேந்திரர் உட்பட மற்ற துறவற சீடர்கள் அனைவரும் தங்குவதற்கு பாராநகரில் வீடு ஏற்பாடு செய்து தந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்தார். “முதன் முதலில் இராமகிருஷ்ண மடம் அமைந்த இடமே பாராநகர். அதை அமைத்த சுரேந்த்ரநாத் மித்ரா என்றென்றும் நாம் போற்றுதற்குரியவர்” என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்.
மகேந்திரநாத் குப்தா
“ம” என்னும் எழுத்தில் தன்னை மறைத்துக் கொண்டு “ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்” (மூன்று பாகங்கள்) என்னும் நூலை நமக்கு அளித்தவர். மகேந்த்ரநாத் குப்தாவுக்கு திருமணமாகி மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். நண்பர் ஒருவர் மூலம் பரமஹம்சரை பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்க சென்றார். அவர் சென்ற போது தனது அறையில் தனியாக கட்டிலில் அமர்ந்திருந்தார் இராமகிருரிஷ்ணர். “ம” அவரை வணங்கி தரையில் அமர்ந்தார். “உனக்கு திருமணம் ஆகி விட்டதா” எனக் கேட்டார் பரமஹம்சர். தவறு செய்து விட்டோமோ என்ற கவலையுடன் தலைகுனிந்தவாறு “ஆகிவிட்டது” எனக் கூறினார் “ம” . “உன் மனைவி வித்யை வடிவானவளா, அவித்யை வடிவானவளா” என அடுத்த கேள்விகேட்டார் குருநாதர். அதற்கு “என் மனைவி ஒரு அஞ்ஞானி” என்றார் ”ம”. உடனே குருநாதர் “நீர் பெரிய ஞானியோ” என்று கேட்டார். அந்த ஒரு கேள்வி “ம” வின் மனதை அடியோடு மாற்றியது. தான் படித்தவர் என்று அவர் கொண்டிருந்த அகந்தை அடியோடு அழிந்தது. மீண்டும், மீண்டும் குருநாதரிடம் வந்தார். பக்தர்களுடன் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் குறிப்பேட்டில் தேதி, நேரம், இடம் குறிப்பிட்டு எழுதி வந்தார். குருநாதரின் மறைவுக்கு பின்னர் பலரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி “அமுத மொழிகள்” எனும் அற்புத புத்தகத்தை மூன்று பாகங்களாக நமக்கு வழங்கினார். அதை படிக்கும் போது குருநாதரின் அருகில் அவர் வார்த்தைகளை நேரடியாக கேட்பது போல நாம் உணரலாம்.
பரமஹம்சர் ஒருபோதும் தன் இல்லற சீடர்களை இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொள்ளுங்கள் என்று கூறவே இல்லை. “துறவறத்தை விட இல்லறத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து, தர்மப்படி வாழ்ந்து, இறைவனை எப்போதும் நினைத்து இருப்பது மிகவும் கடினமானது” என்கிறார்.
பிரம்ம சமாஜத்தின் தலைவர் கேசவர். பரமஹம்சரின் பால் அன்பும் பக்தியும் கொண்டவராக திகழ்ந்தார். அவரது வீட்டில் ஒருமுறை பரமஹம்சர் பக்தி பாடல்கள் பாடி ஆன்மிக விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.
தட்டியின் மறைவில் கேசவரின் வீட்டுப் பெண்களும் அந்த அமுத மொழிகளைக் கேட்ட வண்ணம் இருந்தனர். அப்போது கேசவர் பரமஹம்சர் பால் மிகவும் ஈர்க்கப்பட்டு “இப்பொழுதே பக்தி எனும் நதியில் மூழ்கிட மனம் துடிக்கிறது” என்றார். குருநாதர் சிரித்தபடி “அடடா அப்படி எல்லாம் வேண்டாம், நீங்கள் ஒரேயடியாக மூழ்கி விட்டால் இந்த தட்டியின் பின் நிற்பவர்களின் கதி என்ன? ஆகவே முழுகிட வேண்டாம் அவ்வப்போது சிறிது கரைக்கும் வந்து செல்லுங்கள்” என்றார். கேசவர் உட்பட அனைவரும் சிரித்து விட்டனர். பரமஹம்சர் பெரிய மேடை பேச்சுக்களை தயாரித்து பேசியவர் அல்ல. யாருக்கும் வகுப்புகளும் எடுக்கவில்லை. அவர் அறிந்ததெல்லாம் அம்பிகைதான். சாதாரண மக்கள் தன் சந்தேகங்களை கேட்கும்போது எளிய கதைகள் மூலம் விளக்கி பதிலளித்திருக்கிறார். குழந்தை சுபாவம் கொண்டவரான, மிகவும் எளிமையான அவர்பால் மக்கள் தானாக ஈர்க்கப்பட்டனர். எத்தனையோ பண்டிதர்கள் அவரைச் சந்தித்தார்கள். அவரிடம் பல கேள்விகள் கேட்டு மிகச்சரியான விடைகளை பெற்று தெளிவடைந்து இருக்கிறார்கள். அவரோ முறையாக பள்ளி கல்லூரிக்கு சென்று பயிலவில்லை. ஆனால் கல்லூரிப் படிப்பு வரை படித்த, பகுத்தறிவு பேசிய, பிரம்ம சமாஜ உறுப்பினராக இருந்து கடவுளுக்கு உருவம் இல்லை என்று வாதிட்ட நரேந்திரர், நாடக கதைகள் மூலம் பக்தியை பரப்பினாலும் சில தீய பழக்கங்களை விட முடியாமல் தவித்த, அதே நேரத்தில் பரமஹம்சரை அவதார புருஷர் என உணர்ந்திருந்த கிரீஷ் சந்திரகோஷ், இன்னும் எத்தனையோ பேரையும் தன்பால் காந்தம் போல் கவர்ந்து இழுத்தவர் பரமஹம்சர்.
ஒரு சமயம் தட்சிணேஸ்வர கோவிலில் சில நகைகள் திருட்டு போய்விட்டன. அதுசம்பந்தமாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு அங்கே வந்தார். அவர் பரமஹம்சர் பால் மிகுந்த பக்தி கொண்டவர். அவரால் கோவிலில் நகைகள் திருட்டு போய்விட்டதை பொறுக்க முடியவில்லை. அவர் அங்கிருந்த கடவுளின் திருஉருவ சிலையைப் பார்த்து “கடவுளே உன்னால் உன்னுடைய நகைகளையே காப்பாற்றிக் கொள்ள முடியாவிட்டால் எங்களை எப்படி காப்பாற்றப் போகிறாய்” எனக் கேட்டார்.
அவர் அருகில் இருந்த பரமஹம்சருக்கு வந்ததே கோபம் . “மதுர்பாபு நீங்கள் எப்படி இவ்வாறு பேசலாம்? உங்களுக்கும் எனக்கும் காணாமல் போனவை விலை உயர்ந்த தங்க நகைகள். கடவுளுக்கு அல்ல. அனைத்தையும் படைத்தவர் அவர்தான். அவருக்கு மண்ணும் பொன்னும் ஒன்றுதான். திருடியவனிலும் திருடப்பட்ட பொருளிலும் அனைத்திலும் அவர் இருக்கிறார். பொன் நகைகளை காப்பாற்றி கொண்டிருப்பது அவர் வேலை அல்ல” என்றார்.
மதுர்பாபு தன் தவறை உணர்ந்தார்.
ஒரு நாள் காளிகோவிலில் பூஜை நடந்து கொண்டிருந்தது. ராணி ராசமணி பூஜைக்கு வந்திருந்தார். திடீரென ராமகிருஷ்ணர் ராணியின் கன்னத்தில் அறைந்தார். “இங்கே வந்தும் உனக்கு அதே நினைவுகள் தானா”? என்று கோபமாக கேட்டார். அங்கிருந்த அனைவரும் பயத்தில் உறைந்து விட்டனர். என்ன நடக்குமோ என தவித்தனர்.
ஆனால் ராணி ராமணியோ சிறிதும் கோபப்படவில்லை. மாறாக மன்னிப்பு கேட்டார். தான் தெய்வ சந்நிதியில் நின்றிருந்த போதும் தெய்வத்தை நினைக்காமல் ஜமீன் விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தது தவறுதான் என ஒப்புக் கொண்டார்.
பிப்ரவரி 2 ஆம் தேதி சனிக்கிழமை 1884 சிவபூரில் இருந்து சில பக்தர்கள் ராமகிருஷ்ணரை சந்திக்க வந்திருந்தனர். அவர்கள் நீண்ட தொலைவில் இருந்து வந்திருந்ததால் அவர்களிடம் சாரமான சில விஷயங்களை பேசினார். அதை இப்போது பார்ப்போம்.
“இறைவன் நம்மை ஏன் இல்லற வாழ்வில் ஈடுபடுத்துகிறார் எனக் கேட்டார் பக்தர். ” படைப்பு தொடர்ந்து நடைபெற வேண்டுமே அதற்காகத்தான், அவர் ஒருமுறை இறையானந்தத்தை அளித்துவிட்டால் அதன் பிறகு யாரும் இல்லற வாழ்வில் ஈடுபட மாட்டார்கள் படைப்பு தொடராமல் போய்விடும்.
வியாபாரி அரிசி மூட்டைகளை அடுக்கிவைக்கிறான். எலிகள் அங்கு போய்விடாமல் தடுக்க சிறிது சர்க்கரை கலந்த பொரியை போட்டு வைக்கிறான். சர்க்கரையின் ருசியில் மயங்குகின்ற எலிகள் இரவு முழுவதும் நறநற என்று பொறியை கொறித்துக் கொண்டுடிருக்கும். அரிசி இருக்கும் பக்கம் கூட அவை செல்வதில்லை” என்று பக்தரின் கேள்விக்கு அவருக்கு புரியும்படி விளக்கம் அளித்தார் பரம ஹம்சர்.
அவரிடம் வரும் பக்தர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி ஒன்றுதான். இந்தப் பிறவியில் நாங்கள் கடைத்தேற வழி என்ன? என்பதுதான் அது. “எப்போதும் இறைவனையே நினைத்துக்கொண்டிருப்பது, நான் என்னும் அகந்தையை அழிப்பது இதுதான் வழி” என்று பதில் அளிப்பார் குருநாதர். “இல்லற வாழ்வில் எத்தனையோ வேலைகள், கவலைகள். இதில் எப்படி இறைவனையே நினைத்துக்கொண்டிருக்க முடியும்”? என பக்தர்கள் கேட்பார்கள். “பணக்காரர் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் எஜமானனின் குழந்தையை கொஞ்சுவாள், நீராட்டுவாள், சீராட்டுவாள், செல்லப்பெயரிட்டு கூப்பிடுவாள். அனால் அவளுக்கு நன்கு தெரியும் அந்தக் குழந்தை அவளுடையது அல்ல என்று. அவள் உள்மனம் எப்போதும் ஊரில் இருக்கும் தன சொந்தக் குழந்தையையே எண்ணிக்கொண்டிருக்கும். அது போல் நாம் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனதை இறைவன் மேல் வைத்திருக்க வேண்டும். நாளடைவில் அதுவே பழக்கமாகிவிடும். உயிர் பிரியும் வேளையிலும் நம் மனம் இறைவனை நினைக்கும். அதுவே நாம் நற்கதி அடைய வழி வகுக்கும் என்று கூறினார் குருநாதர்.
நரேந்திரரை சுவாமி விவேகானந்தராக்கி நமக்களித்த மகான் அவர். “நரேந்திரன் இந்த உலகையே புரட்டி போட்டுவிடுவான் அவனிடம் ஞானாக்னி கொழுந்து விட்டெரிகிறது” என்று கூறியவர் குருநாதர். அவர் வார்த்தைகள் மெய்யானதை இன்று நாம் காண்கிறோம்.
சிறிது பணக்கஷ்டம் இருந்த “ம” அவர்களுக்கு குருநாதர் மறைவுக்கு பின்னர் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை கிடைத்தது. பின்னால் சொந்தமாக பள்ளிக்கூடமும் நடத்தினார். அவர் வாழ்வில் இல்லாமையை இல்லாமல் செய்தவர் குருநாதர். என்னைப்பற்றி ஓரிரு வார்த்தைகள். தடைக்கற்களை படிக்கட்டுக்களாக மாற்றி குடும்ப வாழ்விலும் ஆசிரியப்பணியிலும் மன நிறைவுடன் வாழ்கிறேன் என்றால் அதற்கு காரணம் குருநாதரின் அருளாகிய ஒளியே எனக் கூறி கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருவடிகளே சரணம்
(ஆசிரியர் பழவேற்காடு தமிழ்நாடு ஸ்ரீ கிருஷ்ணா விவேகானந்தர் வித்யாலயத்தின் முதல்வர்.)