சுதந்திரப் போராட்டமும்    சுப்பிரமணிய சிவாவும்

 – கனிராஜன்

மதுரை மாவட்டம் கொடைக்கானல் மலையடிவாரம் வத்தலகுண்டு கிராமம். நடுத்தர குடும்பத் தலைவரான ராஜம் ஐயர் அவரது மனைவி நாகம்மாளுடன் வாழ்ந்து வந்தார். ஒருமுறை  தனது கணவர்  வெளியூர் சென்று விட்டதால் நாகம்மாள் அய்யம்பாளையத்தில் தங்கியிருந்தார். அப்போது அவரது கனவில் பார்வதியும் சிவனும் தோன்றினார். நாகம்மாள் கையில் ஒரு குழந்தையைக் கொடுத்தார் பார்வதி. இப்படி ஒரு கனவைக் கண்டவுடன் நாகம்மாளுக்கு மகிழ்ச்சி. மேன்மக்கள், தூய்மையான உள்ளம் படைத்தோர்,ஆழமான பக்தி கொண்டவர்களது  கனவில் இறைவன் காட்சி தருவது இன்றும் என்றென்றும் நடந்து வரும் நிகழ்ச்சி.

தனது பெண்ணின் கனவினைக் கேள்வியுற்ற அவரது தந்தை மனமகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சி நடந்த சில தினங்களில் ராஜம் ஐயர் தன் மனைவியைத் தேடி வந்து சேர்ந்தார். 1884 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதியன்று நாகம்மாள் –  ராஜம் ஐயர் தம்பதியருக்கு ஆண்குழந்தை  கனவில் கண்டது போலவே பிறந்தது. பிராமண குடும்பம் என்பதால் அனைத்து வைதிகச் சடங்குகளும் செய்து முடித்துக் குழந்தைக்கு சுப்பிரமணிய சிவம் எனப் பெயரிட்டனர்.

கடவுள் மீது தீவிர ஈடுபாடு கொண்ட சிவா கடைசிவரை அப்படியே வாழ்ந்தார். சுப்பிரமணிய சிவத்தின் கல்வியைக் காரணம் காட்டி மதுரைக்கும், பின்பு திருவனந்தபுரத்திற்கும் குடியேறினார் ராஜம் ஐயர். தனது மகனின் கல்வியில் அதிகக் கவனம் செலுத்தி வந்த ராஜம் ஐயர் திருவனந்தபுரம் நகர உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளிலும்  இலக்கியங்களிலும் சிவாவுக்கு ஆழமான ஈடுபாடு உண்டு. சிறந்த இலக்கியவாதியாக  சிவா திகழ்ந்ததற்கு அவரது பள்ளி நாட்களே காரணம் ஆகும். பேச்சுப் போட்டிகளில் பள்ளியில் பங்குகொண்ட சிவா சிறந்த பேச்சாளராகவும் பின்னாளில் திகழ்ந்தார்.

சச்சிதானந்த சுவாமிகள் என்னும் துறவியின் தொடர்பு, அவரது பிரசங்கம், சத்சங்கம் என சிவாவின் வாழ்க்கை ஆன்மிக விஷயங்களில் திரும்பியது. தமது குருவான சச்சிதானந்த சுவாமிகளுடன் பல இடங்களுக்குத் துறவி போலப் பயணித்தார். தனது தந்தையின் இறப்பிற்குப்பின் தேச பக்தியில் ஈடுபாடு கொண்டார். தர்ம பரிபாலன சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கினார். இதன்மூலம் அரசியல் பக்கம் திரும்பினார். பல கூட்டங்களுக்குச் சென்று சிவா பேசினார். சுப்பிரமணிய சிவாவின் பேச்சு மக்களிடையே எழுச்சியை உண்டாக்கியது. அவரது பேச்சுக்கு மக்கள் ஆதரவு பெருகிவருவதைக் கண்டு திருவனந்தபுரம் சமஸ்தானம் அஞ்சியது. ஆங்கிலேயரின் கோபம் தங்கள் மீது திரும்பும் எனப் பயம் கொண்டது. எனவே சிவா தன் குடும்பத்துடன் திருவனந்தபுரத்தை விட்டுச் செல்லவேண்டும்  என உத்தரவிட்டது திருவனந்தபுரம் சமஸ்தானம்.

திருவனந்தபுரத்திலிருந்து சிவா என்னும் சிங்கம் திருநெல்வேலியை வந்தடைந்தது. அங்கு வ. உ. சிதம்பரம்பிள்ளைக்கும் சிவாவுக்கும் இடையே தொடர்பு அதிகரித்தது. தேசவிடுதலைப் பணிகளை இருவரும் இணைந்தே செய்தனர். ஆங்கில அரசு விபின் சந்திர பாலர் என்னும் தேசபக்தரை அரவிந்த கோஷிற்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் தரும்படிக் கட்டாயப்படுத்தியது. மறுத்ததால்  பொய் வழக்கால் ஆறு மாதம் சிறை சென்றார். வழக்கில் விடுதலையான விபின் சந்திரபாலுக்குப் பாராட்டு விழா நடத்த வ.உ. சிதம்பரம் பிள்ளையும் சுப்ரமணிய சிவாவும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆங்கிலேயர்களின் தடையை மீறி தூத்துக்குடியில் விழா நடைபெற்றது. அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் வின்ஸ் துரை இருவரையும் அழைத்துப் பேசினார். பேச்சு வாதமாக மாறியது. கலெக்டர் இவர்களது செயல்களைத் தேசத்துரோகம் என்றான். வ.உ.சியும் சிவாவும் “தேச விடுதலைக்குப் போராடுவது தேசத் துரோகமா?” என்றனர். பின்னர், கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது கைதால் கட்டுக்கடங்காத கலவரம் ஏற்பட்டது. அந்த நேரத்தில்தான் ஆஷ்துரையை வாஞ்சிநாதன் எனும் இளைஞன் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து சுட்டுக் கொன்றான். தானும் தன்னைச் சுட்டுக்கொண்டு இறந்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேய அதிகாரிகள் வெளியில் வரவே பயம் கொண்டனர்.

ஆங்கில அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டதற்காக 6 ஆண்டுகள தண்டனை பெற்ற சிவா திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான வேலைகள் அவருக்கு அளிக்கப் பட்டன. வில்லால் பஞ்சை அடிப்பது போன்று ரோமத்தை அடிக்கும் பணி சிவாவுக்குத் தரப்பட்டது. இந்தப் பணியினால் இருமல் நோய் தொற்றிக் கொண்டது. மருத்துவச் சிகிச்சைக்குப் பின்பு வேறு பணிக்கு மாற்றப்பட்ட சிவா கொடிய நோயான தொழு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் திருச்சியிலிருந்து சேலம் சிறைக்கு மாற்றப்பட்ட சிவா, விடுதலையாகும்போது தொழு நோயாளியாக வெளியில் வந்தார்.

அதன் பின்னர் தன் குடும்பத்துடன் மயிலாப்பூரில் குடியேறினார் சுப்ரமணியசிவா. அங்கு தன் நண்பர்கள் உதவியால் ஞானபானு என்னும் இதழைத் துவங்கினார். ஞானபானு என்ற  பல்சுவை மாத இதழான இதில் பாரதி அடிக்கடி எழுதினார். பிரபஞ்ச மித்ரன், இந்திய தேசாந்திரி போன்ற பெயர்களாலும் வார இதழைத் தொடங்கினார். தனது குருவான திலகரின் பிறந்த தின விழாவை மிகச்சிறப்பாக சென்னையில் நடத்தி வந்த சுப்ரமணியசிவா, திருவல்லிக்கேணி கடற்கரைக்குத் திலகர் கட்டம் என்ற பெயரைச் சூட்டினார். ரௌலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. படுத்த படுக்கையில் இருந்த சிவா தள்ளாடியபடியே கூட்டத்திற்கு வந்து பேசினார்.

நோயும் வறுமையும் சுப்பிரமணிய சிவாவை ஒன்றும் செய்ய இயலவில்லை எனலாம். கொல்கத்தாவில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்க மாநாடு முதல் சாத்தூர் அரசியல் மாநாடு வரை எல்லா மாநாட்டிலும் சிவா கலந்துகொண்டார். பாரதமாதா ஆலையம் அமைக்க பாரதாஸ்ரமம் ஒன்றை நிறுவ சிவா திட்டமிட்டார். இதுவும்கூட தேசபக்திக்காகத்தான். தனது பெயரை சுந்தரானந்தர் என மாற்றிக்கொண்டு துறவிபோலக் காவி உடையை அணிந்தார்.திட்டமிட்டபடி பாரதமாதா கோயிலைக் கட்ட அமராவதிப் புதூரில் காந்தியடிகளைக் கொண்டு அடிக்கல் நாட்டினார் சுப்பிரமணிய சிவா.அதற்காக நீதி வேண்டிப் பிரச்சாரம் செய்தபோது ராஜ துரோகக் குற்றத்திற்காக கைது செய்தது ஆங்கிலேய அரசு. சிவா மதுரை மாவட்ட நீதிமன்றம் மூலம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.விடுதலை பெற்று வெளியே வந்த சிவாவை இரயில்களிலும் மற்ற வாகனங்களிலும் பயணம் செய்யக்கூடாது என்று ஆங்கில அரசு தடை விதித்தது.ஆனாலும் நடந்தும் வாடகை வண்டிகளிலும் பயணம் செய்த சிவாவின் மன உறுதிகள்தான் எத்தனை வலிமையானது.

உடல்நிலை மிக மோசமாக இருந்தபோதும் மதுரையில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட சிவா தனது சிவாஜி, தேசிங்குராஜன் நாடகங்களை நடத்தி மக்களுக்குத் தேசபக்தியை ஊட்டினார். நாட்டுக்கு என வாழ்ந்த அந்தத் தியாகச்சுடரின் திருமேனி  நலிவடைந்தது. தனது இறுதி நாட்களை பாப்பாரப்பட்டி பாரதாஸ்ரமத்திலேயே கழித்தார்.அங்கேயே 1925-ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் நாள் சிவா சுப்பிரமணிய சிவா என்னும் தியாகச்சுடர் மறைந்தது. ஆசிரம நந்தவனத்தில்  அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் சுப்பிரமணிய சிவா. ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோரது சொற்பொழிவுகளை மொழிபெயர்த்துள்ளார். தேசிய பஜனைகள் என்பதனை உருவாக்கி சுதந்திரத்தைப் பற்றிய சிந்தனையை வளர்த்தார்.  பாரத நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய பல்லாயிரக்கணக்கானவர்களில் சுப்பிரமணிய சிவாவுக்குத் தனி இடம் உண்டு.

பாருக்குள்ளே நல்ல நாடு; வேதம் விளைந்த திருநாடு; கலையும் கலாச்சாரமும் நிறைந்த நாடு; செல்வமும் கல்வியும் சிறப்புடன் திகழ்ந்த நாடு; ஆன்மீகத்தில் உலகிற்கே வழிகாட்டிய நாடு நம் பாரதநாடு. இப்படி அனைத்திலும் சிறந்த நம் நாட்டின் மீது  முதலில் முகலாயர்கள் படையெடுத்தனர்; வளங்களை வாரிக்கொண்டு சென்றனர். ஆண்டனர்; அடிமைப்படுத்தினர். அடுத்து ஆங்கிலேய கிருஸ்தவர்களின் முறை. வணிகம் செய்ய வந்தவர்கள் நம்மை அடிமையாக்கினர்; பிரித்தனர். நமது கலாச்சாரம் செல்வம் இவை இரண்டும் இந்த அந்நியர்களால் சீரழிக்கப்பட்டன. வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று  விடுமுறை விடுவதில் இருந்து மெக்காலேயின் ஆங்கிலவழிக் கல்வி வரை வளர்ந்து உடை மற்றும் காலணி வரை இன்னமும் சுதந்திர பாரதத்தில்  மனதால் ஆங்கிலேய கிருஸ்தவனுக்கு அடிமையாகவே பல கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் பாரததேசத்தின் இளைஞர்கள் “தென்னாட்டு வீரசிவாஜி” சுப்ரமணியசிவா போன்ற தியாகச் சுடர்களின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்.

(ஆசிரியர் சென்னை மணலி விவேகானந்தா வித்யாலயாவில் தமிழ் ஆசிரியர்.)

Read More : SUBRAMANIYA SIVAM – A fierce patriot who shook the British imperialistic hegemony

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *